தாஜ்மகாலும் சாரணபாஸ்கரனாரும்

tt

ttt

தாஜ்மகாலை பாடாத கவிஞன் இருக்கவே முடியாது. யார்தான் அதை பாடவில்லை.?

“இதுதான் காதலுக்காக சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி” என்று மிக  அழகாகச் சொல்லுவார் கவிஞர் வைரமுத்து. , “கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது” என்று அவர் பாடியபோது அவருடைய கற்பனை வளத்தில் நாமும் மூழ்கிப் போகிறோம்.

கவிஞர் சாரண பாஸ்கரனும் தாஜ்மகாலைப் புகழ்ந்து அழகாக கவிதை வடித்திருக்கிறார். தாஜ்மகாலை அவர் காணச் செல்கிறார். தனியாக அல்ல; தன் துணைவியாருடன். அந்த பளிங்கு கட்டிடத்தை நெருங்கியவுடன் அவரது இல்லத்தரசி மகிழ்ந்துப்போய் “நற்கனவு இன்றைக்கே பலித்தது” என்று கணவரிடம் பூரிப்பாய்ச் சொல்கிறார். இவரும் அதை நேரில் கண்டு மூச்சடைத்து, பேச்சடைத்து நிற்கிறார்.

இல்லத்தரசி உயர்ந்து நிற்கும் மினாராவைக் காட்டி ஏதோ சொல்கிறார். பிறகு இருவரும் யமுனை நதிக்கரையின் அழகை அணுஅணுவாய் இரசிக்கிறர்கள்.  நாமும் அவரது அனுபவத்திலும், சொல்லாடலிலும் மூழ்கிப் போகிறோம்.

“கவிஞன் தன்னுடைய அனுபவத்தை கவிதையை சித்தரித்திருக்கிறான். இதிலென்ன பெரிய ஆச்சரியம்?” என்று நீங்கள் என்னைக் கேட்பது நன்றாகப் புரிகிறது,

ஆம். ஆச்சரியம் இருக்கத்தான் செய்கிறது.

முதல் ஆச்சரியம் கவிஞர் சாரண பாஸ்கரன் ஆக்ரா சென்றதும் இல்லை, தாஜ்மகாலைக்  கண்ணால்   கண்டதும் இல்லை.

இரண்டாவது ஆச்சரியம் அவர் இக்கவிதையை 1958-ஆம் ஆண்டு மணிச்சரத்தில் எழுதியபோது அவருக்கு மனைவியே இல்லை.

அதைப்பற்றி பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது அவர் உரைத்த பதில்:

“அந்த மஹல் நிறைவாழ்வு வாழ்ந்தஒரு தம்பதியரின் (மும்தாஜ்-ஷாஜகான்) நினைவுச் சின்னம். அதைக்காணச் செல்வோரும் தம்பதி சமேதராகவே செல்லவேண்டும் என்பதற்காகவே அதை எழுதுவதற்காக ஒரு மனைவியையும் துணைக்கு அழைத்துக் கொள்ள வேண்டிய அவசியமேற்பட்டது.

“தொழில் தர்மம்” “Job Satisfaction” என்றெல்லாம் கூறுகிறார்களே..? அது இதுதானோ..?

(காஷ்மீர்.. பியுட்டிஃபுல் காஷ்மீர்,  காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் என்று பாடிய கவிஞர் வாலி கூட காஷ்மீரை எட்டிப் பார்க்காதவர்தான்)

#அப்துல்கையூம்

Leave a comment