(புகைப்படம் தந்து உதவியர் பேராசிரியர் எம்.எம்.ஷாஹூல் ஹமீது அவர்கள்)
ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் முதல்வர் E.P.முஹம்மது இஸ்மாயீல் பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். மிகச் சிறந்த கல்லூரி நிர்வாகி. எங்கள் குடும்பத்தில் ஏறக்குறைய அனைத்து பேர்களும் ஜமால் முகம்மது கல்லூரியில் படித்தவர்கள்தான்.
எங்களுக்கு முந்திய தலைமுறையினரில் எனது சிறிய தந்தைமார்கள் ஜமால் முகம்மது கல்லூரியில் படிக்கையில், கல்லூரிக்கு அருகாமையிலிருந்த சேதுராமபிள்ளை காலனியில் தனி வீடு எடுத்து தங்கிப் படித்தனர்.
அதே காலனியில்தான் அப்போது பேரா. முஹம்மது ஈஸா, பெரும்புலவர் பேரா.சி,நயினார் முகம்மது, பேரா.E.P.முஹம்மது இஸ்மாயீல் போன்ற ஜமால் STALWARTS தங்கியிருந்தனர். எனது குடும்ப அங்கத்தினருக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தனர்.
எனது தாய்வழிப் பாட்டனார் அவர்களின் பெயரில் “Hautin Block” கட்டிடத்தை கல்லூரி வளாகத்தில் வணிகத்துறைக்காக நிர்மாணிக்க காரணமாக இருந்தவரும் பேரா.E.P.முஹம்மது இஸ்மாயீல் அவர்கள்தான்.
பேராசிரியரின் குடும்பம் நாகூர் வரும்போதெல்லாம் எங்கள் வீட்டில் தங்குவார்கள். பேராசிரியரின் மனைவியின் உறவினர் மெஹர் பாஷா பஹ்ரைனில்தான் ரொமப காலம் முன்பு இருந்தார்.
பேராசிரியருக்கு மூன்று மகன்கள். டாக்டர் நியாஸ், கலீல், இம்தியாஸ்.
பேராசிரியர் E.P.முஹம்மது இஸ்மாயீல் M.Com அவர்களுக்கு 17.04.1955 வருடம் திருமணம் நிகழ்ந்தது, மணமகள் பெயர் S.A.நூர்ஜஹான் பேகம். இந்த திருமணம் நடந்தேறியபோது மணமகன் முஹம்மது இஸ்மாயீல் ஜமால் முகம்மது கல்லூரியின் வணிகத்துறை தலைமைப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
அவருடைய திருமணத்தின்போது கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார் வரைந்த திருமண வாழ்த்துப்பா இது:.
இருமனத்தை ஒருமனமாய் இணைய வைத்து
—இகவாழ்வின் சுகம்யாவும் எய்த வைக்கும்
திருமணத்தை உவந்தேற்று உவகை பூக்கும்
—திருச்செல்வர் முஹமதிசு மாயில் வாழ்வின்
நறுமணத்தை நுகர்ந்திடவே அருந்து ணையாய்
—நற்குணத்தின் பிறப்பிடமாம் நூர்ஜ ஹானைப்
பெருமையுடன் அடைந்திட்ட சிறப்பு என்ணிப்
—பெருந்தகையாம் இறையருளை வணங்கு கின்றேன் !
வணிகக்கலை ஆய்ந்துணர்ந்து வல்லோ ராகி
—வந்தவர்க்குக் கற்பிக்கும் நல்லோ ராகி
புனிதக்கலை போதிக்கும் இல்ல றத்தே
—புகழ்நாட்டும் அருங்கலையில் சிறப்பு காணக்
கனிவுநிறை முஹம்மதிசு மாயில் வாழ்வின்
—கலங்கரையாய் நாயகியாய் நூர்ஜ ஹானை
இனிதடைந்த இந்நாளின் சிறப்பை எண்ணி
—எங்கும்நிறை இறையருளை வணங்கு கின்றேன் !
சீர்த்திமிகும் குலப்பெருமை செழித்து ஓங்க
—செழுங்குணத்தின் திலகமெனத் திகழ்ந்து, வாழ்வின்
பூர்த்திதரும் இல்லறத்தின் அரரசி யாகும்
—பூவைமணி நூர்ஜஹான் பொலிவுக் கொள்ளக்
கீர்த்திமிகும் முஹம்மதிசு மாயில் அன்பில்
—குன்றாமல் என்றேன்றும் வாழ்வ தற்கு
நேர்த்தியருள் இறையருளை இனிதே வேண்டி
—நெஞ்சார வாழ்த்துகின்றேன் மகிழுகின்றேன் !
அன்பினையே அணிகலனாய் அகத்தில் பூண்டு
—அறவாழ்வே இகவாழ்வாய்ச் செயலிற் றாங்கிப்
பண்பினையே பெரும்பொருளாய்த் திரட்டிச் சேர்த்துப்
—பல்லாண்டும் நல்வாழ்வு வாழ்வ தற்கே
ஒன்றுபடும் முஹம்மதிசு மாயில் நெஞ்சம்
—ஒளிபெறவே நூர்ஜஹான் வாழ்வு பொங்க
என்றும் நிறை பெருங்கருணை சொரியும், வல்ல
—ஏகறப்புல் ஆலமீனை இறைஞ்சு கின்றேன் !
நாடுயர வீடுயர நலிந்தோர் வாழ்வில்
—நலமுயர வளமுயர உதவுங் கல்வி
தேடுபவர்க் குதவிடவே இதய வாசல்
—திறந்துவிட்ட இசுமாயில் இல்லங் காக்கும்
பீடுபெற்ற நூர்ஜஹான் பேறு பெற்றுப்
—பெருவாழ்வு வாழ்ந்திடவே, இல்லந்தோறும்
தேடரியப் பேரறிவு செழித்து ஓங்கச்
—செய்கின்ற சேவையிலே நிலைத்து வாழ்க !