Archive for the ‘அன்றும் இன்றும் !’ Category

அன்றும் இன்றும் !

Independance

சுதந்திரச் சூரியன் தோன்றிவிட்டால் – மக்கள்
   தொல்லை யகன்றிடும் என்றுரைத்தோம்
சுதந்திரம் வந்தது கண்டுகொண்டோம் – மக்கள்
   தொல்லை யகன்றிடக் காணவில்லை !

ஆளும் உரிமை யடைந்துவிட்டால் – மக்கள்
   அவலம் ஒழிந்திடும் என்றுரைத்தோம்
ஆளும் உரிமை யடைந்தவுடன் – நாமே
   ஆதிக்கம் செய்யத் துணிந்துவிட்டோம் !

மாற்றான் பிடிப்பை அறுத்துவிட்டால் – இங்கு
   மக்களின் ஆட்சி மலருமென்றோம்
மாற்றான் பிடிப்பு அகன்றபின்னே – ஏழை
   மக்களை நாமே மறந்துவிட்டோம் !

மக்கள் சுதந்திரம் வேண்டுமென்றோம் – சுய
   மானத்தைப் பேணிடச் சொல்லித்தந்தோம்
மக்கள் நலனை மறந்துவிட்டே – சொந்த
   மதிப்பை வளர்க்க முனைந்துவிட்டோம் !

தாயின் தளையைத் தகர்த்தெறிந்தால் – நம்மைத்
   தாக்கும் வறுமை ஒழியுமென்றோம்
சேயின் நலத்தை அடகுவைத்தே – பிற
   தேசங்கள் நன்மையைப் பேசுகின்றோம் !

கொள்ளை கொள்ளையென கூச்சலிட்டே – மக்கள்
   கொட்டிய குருதியில் நீச்சலிட்டோம்
வெள்ளையர்  ஆட்சி விலகியதும் – அந்த
   வெற்றி மயக்கினில் வீழ்ந்துவிட்டோம் !

– கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன்
(1953 – “நாடும் நாமும்” தொகுப்பிலிருந்து)