நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாண்புகளை எடுத்தியம்பும் எத்தனையோ இஸ்லாமியப் பாடல்கள் உண்டு. இஸ்லாமியப் பாடல்கள் என்றாலே எட்டுகட்டைச் சுதியில், ஊசி உடைகிற உச்ச ஸ்தாயியில்தான் பாட வேண்டும் என்பது எழுதாத ஒரு சட்டம் ஆகி விட்டது. நாகூர் E.M.ஹனீபா, காயல் சேக் முஹம்மது, ஜெய்னுல் ஆபிதீன், ஹஸன் குத்தூஸ் உட்பட எல்லோரும் இதே பாணியைப் பின்பற்றியவர்கள்தாம். “உலக முஸ்லீம்களே நில்லுங்கள்” என்று பாடும் காயல் ஷேக் முஹம்மதின் பாட்டைக் கேட்டால் உலக முஸ்லீம்களை ஓட வைக்க அவர் பாடாய்ப்படுவதுபோல் இருக்கும். (இப்படி பயமுறுத்துவதைப்போல் கத்தினால் யார்தான் நிற்பார்கள்?
மென்மையான இசையிலும் இஸ்லாமியப் பாடலை முழங்கலாம் என்ற பாணி இவர்களுக்கு ஏனோ தெரியாமலே போய் விட்டது. அதற்கு மாறாக நாகூர் எம்.எம். இசைமணி யூசுப் அவர்களின் சாந்தமான சங்கீதம் கலந்த குரலில் மெல்லிசையைக் கேட்பதென்றால் அது ஒரு சுகமான அனுபவம். தென்றல் மிதந்துவரும் கீதம் நம் உள்ளத்தின் ஆழம் வரை வந்து ஊடுறுவிப் போகும். இசைமணி பாடிய ஒரு பாடல்; அது எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டாது.
மண்ணகத்தின் இழிவு மாற்றி
விண்ணகத்தின் உயர்வு சாற்றி
பொன்னகத்தில் அண்ணல் நபி வந்தார்; – அவர்
தன்னகத்தில் சாந்தியின்பம் தந்தார்
என்ற நினைவில் நிற்கும் அருமையான பாடலை இயற்றியது கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன் அவர்கள்.