இறைவனையும் இயற்கையையும் பாடாத கவிஞன் உலகிலேயே இல்லை எனலாம். இயற்கையின் அழகில் இறைவனின் சக்தியை உணர வைப்பதுதான் கவிஞனின் தலையாய பணி. “அழகின் சிரிப்பு” என்று இயற்கையை வருணிப்பார் பாவேந்தர் பாரதிதாசன்.
பூவின் மலர்ச்சியிலும், ஆற்றின் சலசலப்பிலும், மரங்களின் அசைவிலும், பறவைகள் எழுப்பும் ஒலிகளிலும், காற்றின் சுகந்தத்திலும் இறைவனைக் காண்பவன் கவிஞன்.
அவன் நிசப்தங்களில் சப்தங்களையும், சப்தங்களில் நிசப்தங்களையும் இனம் காண வல்லவன். இயற்கையின் வனப்பை இழை இழையாக பிரித்தெடுக்கத் தெரிந்தவன். படைப்புக்களில் படைத்தவனைக் காணத் தெரிந்த படைப்பாளியே கவிஞன்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊணாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் நீக்கமற நிறைந்திருப்பவனை இயற்கையின் ஒவ்வொரு அழகிலும் நெஞ்சார உணர முடியும்.
“உலகம் பிறந்தது எனக்காக; ஓடும் நதிகளும் எனக்காக” என்று தொடங்கும் கவியரசு கண்ணதாசனின் பாடலில்
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் மிதக்கும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்
என்ற வைர வரிகள் நம் சிந்தனைக்கு உணவளிக்கும்.
இயற்கையை அணுவணுவாக இரசித்து அதன் அழகிலும், அசைவிலும் மனதைப் பறிகொடுத்து ஆனந்த தாண்டவமாட ஒரு கவிஞனால் மட்டும்தான் இயலும்.
“எங்கெங்கு காணினும் சக்தியடா” என்று பாரதி பாடுவான். காணும் காட்சிகளில் யாவும் இவன் பராசக்தியைக் காண்கிறான்.
“இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத்தங்கமே!” என்றார் கவி. கா.மு.ஷெரீப்.
‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என்று போற்றும் இறைவனை, நம் பிடறி நரம்புக்கும் சமீபத்தில் இருக்கும் அந்த மூலவனை, இருக்கும் இடத்தைவிட்டு எங்கேயோ நாம் தேடி அலைகின்றோம். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற தாரக மந்திரத்தை ஏற்று தன் அரசியல் பயணத்தை தொடர்ந்தவர் அறிஞர் அண்ணா.
நமது கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன் இறைவனை எங்கெல்லாம் காண்கிறார் என்பதைச் சற்று பாருங்கள்.
பொன்னிலே பொருளிலே புன்னகை புரிவோன்
விண்ணிலே மண்ணில் விந்தைகள் செய்வோன்
கண்ணிலே ஒளியாய்க் காரிருட் களைவோன்
தன்னிலே தானாய்த் தனித்தியங் கிடுவோன்
என்னிலே உணர்வை எழுப்பிடும் இறையோன்
இயற்கையின் சிரிப்பில் இறைவனைக் கண்டு இன்புறும் நம் கவிஞரின் வரிகள் நமக்கு இறைவனின் மேன்மைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.