Archive for the ‘எது கவிதை?’ Category

எது கவிதை?

திறனாய்வு : அப்துல் கையூம்

கவிஞர் திலகம் சாரணபாஸ்கர் அவர்கள், தன் வாழ்நாளின் இறுதிக் காலங்களில் பல்வேறு தருணங்களில், அதுவரை அவரெழுதிய கவிதைகளை  ஒன்று திரட்டி கவிதைத் தொகுப்பாக 1977-ஆம் ஆண்டு வெளியிட்ட நூலின் பின்னுரை இது:

‘நமக்குக் தொழில் கவிதை’ என்பது நம் தேசியக்கவி பாரதியின் வாக்கு.

‘கவிதை என்பது ஒரு தொழிலல்ல; அது ஒருவனின் ஆத்மராகம்’ என்பது புகழ்பெற்ற சோவியத் கவிஞர் மிகாயில் சுவெத்லாவின் தீர்ப்பு.

‘கவிதை பிறக்கிறதேயன்றி அதை யாரும் பெறுவதில்லை’ என்பது தாந்தேயின் நம்பிக்கை.

‘கவிஞன் எப்போது இரட்டை வேடம் போட முடியாது. அவன் தன் படைப்புகளில் ஒருவனாகவும், வாழ்க்கையில் வேறு மனிதனாகவும் வாழ முடியாது. அவனது படைப்பையும் வாழ்வையும் வெவ்வேறாகப் பிரிக்கவே முடியாது’ என்று அடித்துக் கூறுகிறார் ரஷ்யக் கவிஞர் ராபர்ட் ராஷ்தெஸ்த் வென்ஸ்கி.

‘ஒருவன் ஒரே சமயத்தில் மகனாகவும், கணவனாகவும், பாட்டனாகவும் வாழமுடியும். ஆனால் கவிஞன் எப்போதுமே கவிஞன்தான்’ என்று எங்கோ, எதிலோ, எவரோ எழுதியதைப் படித்த ஞாபகம்.

ஆம் ! உண்மைதான்.

கவிஞனின் நிழலே – அவனது உள்ளுணர்வின் சிதறல்களே புதிய கவிதைகளின் பிறப்பு.

அவனது ஏக்கம் – பெருமிதம்; ஓலம் – உவகை; கண்ணீர் – களிப்பு இவைதான் கவிஞனின் கவிதைப் படைப்பு.

அவனது உணர்வைத் தொடுகின்ற – தூண்டுகின்ற – பிசைகின்ற நிகழ்ச்சிகள், அழியாத அமர இலக்கிய மாலையாக – கவிதை மலர்களாக மலர்ந்து மணம் வீசுகின்றன.

முல்லை, மல்லிகை, ரோஜா, மனோரஞ்சிதம் அனைத்துமே மலர்கள்தான். ஆனால் அது ஒவ்வொன்றின் நறுமணமும் வெவ்வேறானதல்லவா? இவ்வாறே கவிதைகள் தரும் உணர்வுகளும் வெவ்வேறானவையே !

இதமாக வீசும் முல்லை போலும், மிதமாக மணக்கும் மல்லிகை போலும், முள்ளோடு பூத்த ரோஜாவின் எழில் மணம் போலும், நினைவோடு இணைந்து மணக்கும் மனோரஞ்சிதம் போலும் ஒவ்வொரு கவிதைகளும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும்.

 கவிதைத் தொகுப்பின் பின்னுரையில் அவர் கூறியிருக்கும் மேகண்ட கருத்துக்கள் கவிதைத் தொழில் புரிபவனை ஓர் உயரிய அந்தஸ்த்தில் தூக்கி உட்கார வைக்கிறது

 “Poetry is the spontaneous overflow of powerful feelings” என்று விளக்கமளிப்பான் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்.

உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்
உவந்தெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்
தெரிந்துரைப்பது கவிதை”

என்று கூறுவார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்.

கவிஞனின் கற்பனை எல்லையில்லாதது. அவனது கற்பனைகள் அசாத்தியத்தை சாத்தியமாக்கவல்லது. “கவிஞன் என்பவன் வெறும் கற்பனையில் மிதப்பவன்; யதார்த்தத்தை உணராதவன் போன்ற குற்றச்சாட்டுகள் அவனுக்கு பொருந்தாது” என்று அடிக்கடிச் சொல்வார் கவிஞர் சாரணபாஸ்கரன்.

“புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே!” என்றும் 

“பொய் சொன்னாரே; பொய் சொன்னாரே
புலவர்களெல்லாம் பொய் சொன்னாரே” என்றும்

“கண்ணுக்கு மையழகு; கவிதைக்கு பொய்யழகு” என்றும் பாடல்கள் பாடி  கவிஞர் சமுதாயத்துக்கு ஓர் எதிர்மறைக் கருத்தை ஏற்படுத்திச் சென்ற கவிஞர்களுடன் ஒப்பிடுகையில் சாரணபாஸ்கரின் சிந்தனை நேரிடைப் பண்பாக (Positive Thinking) இருந்தது.  

கவிஞன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்ற விளக்கத்தை “கவிஞன்” என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையிலிருந்து நாம் அறிந்துக் கொள்ளலாம்.

வானளந்து கோளங்கள் வழியளந்து
…..மொழியளந்து வகுத்து ரைப்போம்
கானளந்து குன்றளந்து கடலளந்து
…..காற்றளந்து கவிதை செய்வோம்
ஊனளந்து உயிரளந்து நரம்போடும்
…..உதிரத்தை அளந்துரைப்போம்
கோனளந்து குடியளந்து குறிப்பளந்து
…..சொல்லளந்து கூற வல்லோம் !

இறைவனின் படைப்புகளை அளப்பதோடன்றி இதயத்துக் குறிப்புகளையும் அளந்துச் சொல்வதுதான் கவிஞனின் வேலை என்கிறார் கவிஞர் திலகம்.

நெடுநிலத்தின் கொற்றவனே என்றாலும்
…..பொய்காக்க நெற்றிக் கண்ணால்
சுடுபவனே வந்தாலும் நடுங்காமல்
…..எதிர்த்திடுவோம், சொன்ன சொல்லை
விடுபவரை மண்மாரி பெய்யவைத்துப்
……புதைத்திடுவோம், வெஞ்சி னத்தால்
கெடுபவரைத் தடுத்திடுவோம், அடுத்தவரை
…..அணைத்திடுவோம் கேட்டைக் கொல்வோம்

மேற்கண்ட வரிகளில் “நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே!” என்று சிவபெருமான் முன் சூளுரைத்த புலவர் நக்கீரனையும். “மண்மாரிப் பொழிக” என்று திருமலைராயன் பட்டினத்தை ஆண்ட அரசனை நோக்கி அறம் பாடிய காளமேகப் புலவரையும் கோடிட்டுக் காட்டுகிறார் நம் கவிஞர் திலகம்.

சதியாளர் எமைக்கண்டு நடுங்கிடுவார்,
…..தலைகவிழ்வார்; தகைமை மிக்க
மதியாளர் எம்துணையை, மதித்திடுவார்
…..துதித்திடுவார்; வையம் போற்றும்
நிதியாளர் தம்புகழை நிலைநிறுத்த
…..எம்முதவி நிதமும் கேட்பார் !
அதிவீரர் என்றாலும் எம்பகைவர்
…..ஆவாரேல் அழிந்து போவார் !

“Pen is mightier than Sword” என்றான் மாவீரன் நெப்போலியன். பேனாமுனை வாள்முனையைவிடக் கூறானதுதான். எழுதுகோலின்  வலிமையினால் எத்தனையோ அரசாட்சி கவிழ்ந்ததை நாம் வரலாற்றிலும், நேரிலும் கண்டிருக்கின்றோம்.

புசிக்காது பசித்திருப்போம், தமிழமுதைப்
…..பருக வைப்போம் புவியைச் சுற்றி
இசைக்காத நாவெல்லாம் எம்கவிதை
…..இசைக்கவைத்து இதயம் ஆள்வோம் !
அசையாத பெருமலையும் ஆட்டுவிப்போம்,
…..அலைபாயும் ஆழி நோக்கி
இசைபாடிச் சதிராடி நிற்க வைப்போம்;
…..வசைபாடி எதையும் வெல்வோம் !

“நமக்குத் தொழில் கவிதை/ நாட்டிற் குழைத்தல்/ இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று பெருமை பொங்க கூறினான் பாரதி. தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து இலக்கியப்பணி ஆற்றுபவன்தான் கவிஞன் என்பதை கவிஞர் திலகம் வரையறுத்துக் காட்டுகின்றார்.

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
…..குடித்தாலும் கயவர் முன்னே
பல்லைத்தான் இளிக்காமல் பண்பைத்தான்
…..அன்பைத்தான் பகர்ந்து நிற்போம் !
புல்லைத்தான் புசித்தாலும், பொன்னைத்தான்
…..குவித்தாலும், புவியை ஆள்வோர்
வில்லைத்தான் வேலைத்தான் எடுத்தாலும்
…..உண்மைதான் விளக்கி நிற்போம் !

“கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?” என்ற ராமச்சந்திரக் கவிராயரின் எண்ணங்களை கவிஞர் திலகம் இங்கே கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பாடலின் தாக்கத்தால்தான் கவிஞர் கண்ணதாசனும்

“அத்தான் என் அத்தான் – அவர்
என்னைத்தான்.. எப்படிச் சொல்வேனடி – அவர்
கையத்தான் கொண்டு மெல்லத்தான் – வந்து
கண்ணைத்தான்.. எப்படிச் சொல்வேனடி?”

என்ற இதமான பாடல் வரிகளை எழுதியிருப்பார்.

போற்றுவதும் தூற்றுவதும் பொருளுக்கே
…..என்றசொலைப் பொசுக்கிவிட்டு
சாற்றுவதும் ஏற்றுவதும் தகுதிக்கே
…..என்பதையாம் தழைக்க வைப்போம்
கூற்றுவனே வந்தாலும் கொள்கையினை
…..மாற்றுவமோ? குற்றங் கண்டால்
சீற்றமொடு சாடிடுவோம் ஆற்றலினைத்
…..திரட்டிடுவோம், சாவை வெல்வோம்.

“போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்.
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்; எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்,”

என்று சூளுரைத்தார் கவிஞர் கண்ணதாசன்.  திறம்வாய்ந்த படைப்பாளியின் படைப்பானது காலத்தையும் கடந்து நிற்கும். இக்கருத்தினை கண்ணதாசன் சற்று மாறுபட்ட விதத்தில் கூறியிருப்பார்.

“மானிட இனத்தை ஆட்டிவைப்பேன் – அவர்
மாண்டுவிட்டால் அதை பாடி வைப்பேன் – நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை”

என்ற வரிகளை ஆழ்ந்து நோக்கினால் அதில் ஆணவக்கருத்து என்று சொல்லுவதை விட படைப்பாளி தன் படைப்பின் மீது வைத்திருக்கும் தன்னம்பிக்கை கருத்துதான் வெளிப்படும்.

இதே தன்னம்பிக்கைதான்

“சொல்லடி சிவசக்தி – என்னைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே !”

என்று பாரதியை பாட வைத்தது.

கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனின் பாடல்களில் கவிஞனுக்கே உரிய ஒரு பெருமை, தன்னம்பிக்கை, குறிக்கோள், போன்ற ஆளுமைக் குணங்கள் மேலோங்கி இருப்பதை நாம் காண இயலும்.