Archive for the ‘கல்லக்குடி கொண்டான்’ Category

கல்லக்குடி கொண்டான்

muka

தேர்தல் நேரம் வந்துவிட்டால் போதும். தமிழகத்தின் மூலை முடுக்குகளில், பட்டி தொட்டிகளில்,  ஒலிபெருக்கிகளில் அவரவர் கட்சிகளின் கொள்கை முழக்கப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கி விடும்.

தி.மு.கழக மேடைகளில் கட்டாயம் சிம்மக்குரலோன் நாகூர் ஹனீபாவின் வெண்கலத் தொனி முழக்கம் அதிரடியாய் முழங்கும். அதிலும் மிக முக்கியமாக ஒரு பாடல்; அது ஒலிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியை போற்றி புகழக்கூடிய பாடல் அது. அந்த பாடலைக் கேட்டு விட்டு கழகத் தொண்டர்கள் நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேற, உடன்பிறப்புகள் ஓடிஓடி போஸ்டர் ஒட்டுவார்கள்; தோரணம் கட்டுவார்கள்; தேர்தல் பிரச்சாரத்தில் ஊன் உறக்கம் மறப்பார்கள்.

டால்மியாபுரத்தை ‘கல்லக்குடி’ என்று பெயர் மாற்றம் செய்வதற்கு கலைஞர் தண்டவாளத்தில் தலைவைத்து (ரயில் தன் மீது ஏறாது என்று உறுதி செய்த பின்புதான்) ‘கல்லக்குடி கொண்டான்’ என்ற பட்டத்தையும் பெற்றார்.

“கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே !” என்ற பிரசித்த பெற்ற அந்த கொள்கை முழக்கப் பாடலை எழுதியவர் யார் தெரியுமா?

சாட்சாத் சாரணபாஸ்கரனேதான்.

இதோ அந்தப் பாடல் :

கல்லக்குடி கொண்ட
கருணாநிதி வாழ்கவே! – மக்கள்
உள்ளம் குடி கொண்ட
உண்மைத் தலைவர் வாழ்கவே!

பொன்னான தமிழ்நாட்டின்
அண்ணாவின் தம்பியாய்
பொலிகின்ற கருணாநிதி வாழ்கவே!

பன்னாடும் புகழ்ப்பாடி
பணிகாட்டி அணிகாட்டி
கொண்டாடும் கருணாநிதி
கண்ணான கருணாநிதி – கழகத்தின்
கண்ணான கருணாநிதி

அரிதான எழுத்தாற்றல்
அழகான உரையாற்றல்
அமைந்திட்ட கருணாநிதி
பெரிதான கவியாற்றல்
புகழான நடையாற்றல்
நிறைந்திட்ட கருணாநிதி – புகழ்
பூக்கும் கருணாநிதி – தமிழ்
காக்கும் கருணாநிதி

ஏடெல்லாம் புகழ்கின்ற கதை தீட்டி
நாடகக்கலை வாழ பணியாற்றினார்
கேடெல்லாம் களைகின்ற நோக்கோடு
சினிமா வசனத்தில் அணி ஏற்றினார்
ஈடில்லா கருணாநிதி எங்கள்
இதயத்தின் கருணாநிதி
அண்ணாவின் அடிநின்று
அழகான நெறி செல்லும்
அதிமேதை கருணாநிதி
ஐந்து முறை முதல்வராக
ஆட்சி பீடம் ஏறி
தந்த வாக்குறுதிகளை அன்றே
நிறைவேற்றிய கருணாநிதி

குண்டேந்தும் பீரங்கி வந்தாலும்
கொள்கையில் மாறாத கருணாநிதி
பண்போங்கும் கருணாநிதி – கொடும்
பகை வெல்லும் கருணாநிதி
இமயத் தோள் கொண்ட கருணாநிதி
பார்புகழும் கருணாநிதி – என்றும்
பேர் நிலைத்த கருணாநிதி
கல்லல்குடி கொண்ட
கருணாநிதி வாழ்கவே!