சாரண பாஸ்கரனின் தமிழ்ப் பற்று அளவிடற்கரியது. இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்ற முழக்கத்திகேற்ப வாழ்ந்தவர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். “தமிழோடு நிலைத்திருக்கப் பிறந்தவன்” என்று கவிஞர் திலகத்தைப் பாராட்டுவார் பாவேந்தர் பாரதிதாசனார்.
‘யூசுப் -ஜுலைகா’ சரிதையின் தொடக்கத்தில் காணப்படும் வரிகளைப் பார்த்தால் நமக்கு நன்கு விளங்கும்.
என்னருந்தமிழில் யூசுப் – ஜுலைகா
உன்னதச் சரிதையை உரைத்திடத் துணிந்தேன்
என்று அருந்தமிழுக்கு புகாழாரம் சூட்டுவார் கவிஞர்.
என்னருமைத் தமிழ்நாடே எழிற்பூங்காவே
…..இரத்தம் தோய்த்தொரு கவிதை உனக்குத்தீட்ட
எண்ணுகிறேன் செவியேற்பாய் விழிதிறப்பாய்
…..ஏங்கியழும் என்னுள்ளம் சிரிக்கச் செய்வாய்
என்ற வரிகளில் கவிஞர் தமிழ் மொழியின் மீது வைத்திருக்கும் அன்பு நமக்கு நன்கு புலனாகிறது. நம்முன்னோர்கள் போற்றி வளர்த்த தமிழை பேணுபவர் குறைந்து வரிகின்றார்களே என்ற ஆதங்கத்தை அவர் பல்வேறு தருணங்களில் வெளிக்காட்டியுள்ளார்.
உன்னருமைத் தமிழ்காப்பார் எவருமில்லை
…..ஓயாது பிறமொழியை காப்போ ருண்டு !
தன்னருமை உணருகின்ற சக்தியில்லை
…..தனையல்லார் பெருமையுணர் சக்தியுண்டு.
இது “தமிழ்நாடே” என்ற தலைப்பில் அவரெழுதிய கவிதையில் காணப்படும் வரிகள்.
தமிழ் மொழி மீதும் தமிழ் பண்பாட்டின் மீதும் அவர் அளவற்ற மரியாதை வைத்திருந்தார். ‘இனப்பற்று இல்லாதவன் எதுவுமில்லாதவன்’ என்பார் அவர்.
மணமற்ற மலரினெழில் ரசிப்பதில்லை
…..மனமற்ற உபசாரம் ருசிப்பதில்லை
பணமற்ற புவிவாழ்வு ஒளிர்வ தில்லை
…..பலமற்ற சமுதாயம் உயர்வ தில்லை !
குணமற்ற பெருநட்பும் நிலைப்பதில்லை
…..கொள்கைக்கே உயிவாழ்வோன் களைப்பதில்லை !
இனப்பற்று இல்லார்க்கு எதுவுமில்லை
…..இதுவன்றிப் பொதுஞானம் எதுவுமில்லை
என்று நெத்தியடி கருத்தோடு தன் கவிதையை முடிப்பார்.
வேறொரு கவிதையில்:
பாடட்டும் பைந்தமிழை
பருகட்டும் அதனமுதைப்
பாரோருள்ளம்
என்று பாடி தன் தய்மொழிப்பற்றை உறுதி செய்வார்.
தன் சொந்த ஊரான கூத்தநல்லூரில் இயங்கும் ஆக்ஸ்போர்ட் ஆங்கிலப் பள்ளிக்கு அவர் எழுதிக் கொடுத்திருக்கும் பள்ளிப் பாடலை கவனியுங்கள்
அன்னைத் தமிழை மறக்காமல்
ஆங்கில அறிவை இழக்காமல்
என்று பாடலின் முதல் வரியினைத் தொடங்குகிறார். “பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற பாரதியின் கனவுக்கேற்ப தமிழ் மொழியின் அவசியத்தை உணர்த்தும் அதே வேளையில், பிறமொழிகளையும் ஏற்க வேண்டும் என்ற அரிய கருத்தினை கவிஞர் திலகம் அவர்கள் பச்சிளம் மனதில் பசுமரத்தாணியாய் பதிய வைக்கும் பாங்கினை புகழாமல் இருக்க முடியுமா?