கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் ஜனாப் காயிதேமில்லத் அவர்கள் நாடறிந்த நற்பெருந்தகை. திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய கோட்டையில் 5.6.1893 -ல் பிறந்தவர். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்திலும், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கு கொண்டவர். இந்திய அரசியல் விதிப்பு அவையில் உறுப்பினராக இருந்து மாநிலங்களுக்கு அதிக ஆட்சியுரிமை வழங்கப் படவில்லையென்றால் அவை “மினுமினுக்கும் நகராட்சி போன்றவைகளே” என்று நயம்பட உரைத்தவர். இந்திய நாட்டு அரசின் தேசிய மொழிகளில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என்று வற்புறுத்தி வெற்றி கண்டவர். சிறுபான்மையினரின் நலனில் அக்கறை கொண்டவர். தமிழகத்தில் 14 இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை அமைத்தவர்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயீல் சாகிப் அவர்கள் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தார் கவிஞர் திலகம் சாரணபாஸ்கர். “நாடும் நாமும்” என்ற தலைப்பில் சமுதாயக் கவிதைகள் அடங்கிய தொகுப்பை தென்றல் மன்றம் பதிப்பித்திருந்தது. 17.9.1960 – ல் வெளியிடப்பட்ட அந்த நூலை காயிதே மில்லத் அவர்களுக்கு அர்ப்பணித்து அவரைப் புகழ்ந்து எழுதிய வரிகள் இவை.
இரவு பகல் பாரது உழைத்துழைத்தே
இணையற்ற சாதனையில் வெற்றிகண்டே
உறவுமுறை பாராது உண்மை பார்க்கும்
ஒப்பற்ற காயிதே மில்லத் வாழ்க !
– அப்துல் கையூம்