ஏவலராய் ஏதுமறி யாதவராய்க்
கோழையராய் இரந்துண் போராய்ச்
சேவகராய்ச் சிரம்பணியும் அடிமையராய்ச்
செயலிழந்த சிலைபோன் றோராய்க்
கேவலமாய் வாழ்ந்தஎமை யாவருடன்
சமமாக்கிக் கீர்த்தி மிக்கக்
காவலராய் ஆக்குவித்த சுதந்திரமே
வாழியநீ கடைசி மட்டும் !
பேச்சுரிமை எழுத்துரிமை செயலுரிமை
அன்னியர்கள் பிடியில் சிக்கி
மூச்சுவிடும் உரிமைக்கும் மற்றவரை
யாசிக்கும் முறையில் தாழ்ந்து
ஏச்சடைந்தும் வலுவிழந்து எவரிடத்தும்
தலைதாழ்ந்தே இழிந்த எம்மைக்
கூச்சமற்றுத் தலைநிமிர்ந்து உலவவைத்த
சுதந்திரமே குன்றா தோங்க !
இனஉரிமை மொழியுரிமை மதஉரிமை
அனைத்தையுமே எதிர்த்தொ ழித்துப்
பிணஉரிமை பெற்றிடவும் அன்னியரை
எதிர்பார்த்துப் பின்ன டைந்து
கனவினிலும் நல்வாழ்வு காணுகின்ற
உரிமையற்ற கடைய ராக்கித்
தினம்வருத்தும் அடிமையினை உடைத்தெறிந்த
சுதந்திரமே செழித்து வாழி !
– கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன்
(1949 – “நாடும் நாமும்” தொகுப்பிலிருந்து)