Archive for the ‘தாலாட்டு’ Category

தாலாட்டுப் பாடல்

%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81

ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
சீராக கண் வளர்ந்து
சீக்கிரமே தூங்கி விழி!

பாரோர் புகழ்ந்துரைக்கப்
பாட்டியரும் பூட்டியரும்
சீர ஆட்டித் தாலாட்டிச்
சிரிப்பவனே தூங்கி விழி!

ஊரார் உறவினரும்
உற்றவரும் பெற்றவரும்
பாராட்ட வந்துதித்த
பனிமலரே தூங்கிவிழி!

நேராரும் இல்லையென்று
நீள்நிலமே போற்றிடவே
காரார் முகிலெனவே
கவிபொழியத் தூங்கி விழி!

தள்ளாடிக் காலூன்றித்
தகிங்கினத்தோம் தாளமிட்டு
சொல்லாட வந்தவனே
சோர்வகற்ற தூங்கி விழி!

பெற்றவரைப் பிறந்தவரைப்
பெரியவரை வறியவரை
கற்றவரைப் போற்ற வந்த
கண்மனியே தூங்கி விழி!

சோம்பல் துணையகற்றிச்
சூழ் பகையை வெற்றி கொள்ள
ஆம்பல் மலராக
ஆருயிரே தூங்கி விழி!

எல்லார்க்கும் எல்லாமும்
எய்தவைக்கும் நற்பணியில்
நில்லாதுழைக்க வந்த
நித்திலமே தூங்கி விழி!

ஏழைவரில் வாழ்ந்தாலும்
எள்ளுபவர் சூழ்ந்தாலும்
கோழையாக வாழாமல்
குலவிளக்கே தூங்கிவிழி!

போலிகளும் கூலிகளும்
பொதுவாழ்வில புகுதாமல்
வேலியாக காவல் செய்யும்
வீரனாகத் தூங்கி விழி!

ஏமாற்றும் எத்தனாகி
ஏமாறும் பித்தனாகி
பூமிச் சுமையாகாமல்
பொலிவு பெறத் தூங்கிவிழி!

பொய்யுரைத்து பொன்குவித்துப்
புகழ் வரித்து வாழாமல்
மெய்யுரைத்து வையகத்தே
மேன்மை பெறத் தூங்கி விழி!

கவிஞர் சாரணபாஸ்கரனார்

sarana-bhaskaran