பாட்டாளிகளின் மேன்மையை “பாட்டாளி” என்ற தலைப்பில் பாட்டுத்தலைவன் சாரணபாஸ்கரன் பாட்டாய் வடித்த சொற்காவியம் இது :
காட்டை யழித்திடுவோம் – அதிற்பல
காட்சியுண் டாக்கிடுவோம் !
நாட்டைத் திருத்திடுவோம் – பொதுவினில்
நன்மைகள் செய்திடுவோம் !
மலையைச் சிதைத்திடுவோம் – அழகிய
மாளிகை யாக்கிடுவோம் !
சிலையைச் செதுக்கிடுவோம் – அதிலெழில்
சிந்திடச் செய்திடுவோம் !
குளத்தையும் வெட்டிடுவோம் – உயரிய
கோபுரம் கட்டிடுவோம் !
நிலத்தை உழுதிடுவோம் – உணவுக்கு
நெற்பயிர் செய்திடுவோம் !
மூச்சை யடக்கிடுவோம் – கடலினுள்
மூழ்கிவெண் முத்தெடுப்போம் !
கூச்சம் சிறிதுமென்றி – கையகலக்
கோவணத் தொடுநிற்போம் !
அஞ்சிப் பணியமாட்டோம் – எவர்க்கும்
அடிமையாய் வாழமாட்டோம் !
பஞ்சையர் என்றிகழ்ந்தால் – அவர்களின்
பல்லை யிதிர்த்திடுவோம் !
– கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன்
(1945 – “சாபம்” கவிதைத் தொகுப்பிலிருந்து)