Archive for the ‘மு. மு. இஸ்மாயீல் அணிந்துரை’ Category

மு. மு. இஸ்மாயீல் அணிந்துரை

[கவிஞர் சாரணபாஸ்கரன் அவர்களுடைய “யூசுப்-ஜுலைகா”
காப்பியத்திற்கு வழங்கிய அணிந்துரை]

 

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு மு. மு. இஸ்மாயீல் அவர்கள் மூன்றாம் பதிப்பிற்கு வழங்கிய அணிந்துரை

இந்தக் காப்பியம் காதற் காப்பியமே என்றாலும் இது ஒரு கற்பனைக் காப்பியம் அன்று. யூசுப்-சுலைகா என்ற இருவரையும் பற்றி, திருக்குர் ஆனும் கூறுகிறது. விவிலியமும் கூறுகிறது. இப்படிக் கூறப்படுவதன் காரணமாக, இது இறைவனே எடுத்துக்கூறும் சரித்திர நிகழ்ச்சியாக அமைந்து, மக்கள் அனைவர்க்கும் படிப்பினைகள் தரும் சரித்திரச் சான்றாகவே ஆகிவிடுகிறது.

இஸ்லாமிய வரலாற்றின்படி யூசுபும், அவரது தந்தை யாகூபும் நபியாவார்கள். யாகூப் அவர்களின் இளைய தாரமாகிய ராஹிலாவின் வயிற்றில் மகனாகப் பிறந்தவர் யூசுப். அழகே உருவெடுத்து வந்தது போன்ற தோற்றமுடைய ஆணழகர். அவரது அன்னை ராஹிலா சிறிது காலத்திலேயே இறந்து விடுகிறார். தமது ஏனைய புதல்வர்களை விடவும் யூசுபிடம் தனியன்பு கொள்ளுகிறார் யாகூப். இதனால் யாகூப் நபியின் மற்ற தாரத்தின் புதல்வர்கள் யூசுபையே தந்தையிடமிருந்து பிரித்துவிடத் திட்டமிட்டு தந்திரமாகத் தங்களுடன் யூசுபை வனத்திற்கு அழைத்துச் சென்று, பாழடைந்த ஆழ்கிணற்றில் தள்ளிவிட்டு, யூசுபை ஓநாய் அடித்துத் தின்றுவிட்டதாகத் தந்தையிடம் பொய்யுரைக்கின்றனர்.

கிணற்றிலே தள்ளப்பட்ட யூசுப், அவ்வழியே சென்று கொண்டிருந்த வணிகர்களால் மீட்கப்படுகிறார். அவரது அழகைக் கண்டு அதிசயித்து நின்ற வணிகர்களால் யூசுபை என்ன செய்வதென்றே தெரியாமல், அவரையும் வியாபாரப் பொருளாக்கி, அக்கூட்டத்தின் தலைவரான மாலிக்கினிடமே விற்று விடுகின்றனர்.

மன்னர் தைமூஸின் திருமகள் சுலைகா, அழகுப் பெட்டகமாய் வளர்ந்து வருகிறாள். ஒரு நாள் அவள் ஒரு ஆணழ கனைக் கனவிலே கண்டு அவனிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து விடுகிறாள். அவள் சந்தித்தவனைக் கண்டுபிடித்து அவனிடம் சுலைகாவை ஒப்படைக்க சுயம்வரம் நடத்திப் பார்க்கின்றனர். இங்கேயும் தான் கனவிலே கண்ட ஆணழகனைக் காணாமல் ஏமாற்றமடைகிறாள் சுலைகா. அவளது உணர்வு கலங்குகிறது. இங்கே நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார் கவிஞர்.

இரவு பகல் எந்நேரமும் தன்னுடனிருக்கும் தோழிகளாலும், அரசு நடத்தும் அமைச்சர்களாலும், படைநடத்தும் வீரத் தளபதிகளாலும் தன்னைச் சீராட்டி வளர்த்த அருமைத் தந்தையினாலும் தன் கனவுக்காதலனைக் கொண்டுவந்து தன்னுடன் சேர்க்க இயலாமையை எண்ணி எண்ணி ஏங்கிய சுலைகா, இறுதியாக இறைவனிடமே தன் துன்பத்தை முறையிடுகிறாள். இப்போது சுலைகா ஏமாறவில்லை; அந்த ஆணழகர் அவளைத் தேடி வருகிறார். வந்தவரை விடவில்லை சுலைகா. இறைவன் மீது ஆணையிட்டு, அவரது இருப்பிடம் பெயரை வினவுகிறாள்.

செங்கடலின் மத்தியிலோ, கருங்கடலின்
முனையினிலோ தீக்கொழுந்து
பொங்குகின்ற பாலையிலோ பனி உறையும்
பாறையிலோ புலியும் சிங்கம்
தங்குகின்ற காட்டினிலோ எங்கே நீர்
இருக்கின்றீர்? சாற்று வீரேல்
அங்குடனே வந்திடுவேன். அது நரகே
என்றாலும் அன்போ டேற்பேன்!”

என்கிறாள். செங்கடலின் பேரலைகள் முத்தமிட்டு மகிழுகின்ற மிசுரு நாட்டின் முதலமைச்சன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான் அந்த ஆணழகன். இத்தனையும் கனவில்தான். ஆனால் அவள் இந்தச் சந்திப்பை வெறும் கனவாக நினைக்கவில்லை. உண்மையான சந்திப்பாகக் கருதித் தன்னை மிசுரின் முதலமைச்சருக்குத் திருமணம் செய்விக்கும்படி தந்தைக்குச் செய்தியனுப்புகிறாள்.

மிசுரு நாட்டின் முதலமைச்சரான அஜீஸுக்கு இத்தகவலை அனுப்பி, தன் அழகுத் திருமகளை மணந்து கொள்ள தன்னாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார் மன்னர் தைமூஸ். மன்னரின் விருப்பத்தை அஜீஸால் மறுக்க முடியவில்லை. மணப்பதற்குச் சம்மதந்தான். ஆனால் என் நாட்டிலிருக்கும் கடமையின் காரணமாக அங்கு வர முடியவில்லை என்றும், திருமணத்தை முடித்துப் பெண்ணை அனுப்பிவைத்தால் தான்ஏற்றுக் கொள்வதாகவும் அஜீஸ் கூறிவிடுகிறார். இதன்படியே சுலைகாவின் திருமணச் சடங்குகளைத் தன்நாட்டிலேயே முடித்து, மகளைக் கணவனின் நாட்டிற்கு அனுப்பிவைக்கிறார் தைமூஸ். ஆனால், தன்னை மணந்து கொண்ட மிசுரின் முதலமைச்சர் ஆஜீஸ், தனது கனவில் தோன்றிய ஆணழகரல்லர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள் சுலைகா. அவளது ஏமாற்றத்தை அறிந்து அவளது உணர்ச்சியை மதித்து ஒதுங்கிவாழ்கிறார் அஜீஸ். தன் கனவுக்காதலனல்லாமல், காற்றும் தன்னைத் தீண்டக்கூடாதென்று வாழ்கிறாள் சுலைகா. அவள் விருப்பப்படியே வாழ்வதற்கான அத்தனை வசதிகளையும் செய்து தருகிறார் அமைச்சர் அஜீஸ்.

அழகர் யூசுபை கிணற்றிலிருந்து மீட்டு, அடிமை கொண்ட வணிகர், தம் பொருள்களை விற்கவும், புதிய பொருள்களை வாங்கவும் பல நாடு நகரங்களைக் கடந்து இறுதியில் மிசுருக்கே வருகின்றனர். அவரது அழகைக் காணுவதற்கு ஆண்களும் பெண்களும் அணியணியாகத் திரண்டு வந்து, காட்சிப் பொருளைக் காணுவதற்குக் கட்டணம் கொடுப்பது போல, யூசுபின் அழகைக் கண்டுகளிக்கக் கட்டணம் கொடுக்கின்றனர். அவரது அழகைக் காணுவதற்கே கூட்டங் கூட்டமாக வரும் மக்களிடையே, அவரையே அடிமையாக விற்று அதிகப் பணம் பெற வணிகர் தலைவன் மாலிக் முயற்சி செய்கிறான்.

யூசுபின் அழகின் சிறப்பு நகரெங்கும் பரவி அஜீஸின் இல்லத்திற்கும் எட்டுகிறது. அவரை அடிமையாகப் பெறு வதையே பெருமையாக நினைத்த அமைச்சர் அஜீஸ், ஏலமிடப்பட்ட யூசுபைத் தன் அரண்மனைக்கே கொண்டுவரச் செய்கிறார். அவரது பேரழகைத் தோழிகள் மூலம் அறிந்த சுலைகா அவரைக்கண்டு, அவரேதான் கனவுக்காதலர் என்பதையறிந்து அவர் எடைக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து யூசுபை அடிமையாகப் பெறுகிறாள் சுலைகா. தன்கனவுக் காதலன் தனது அரண்மனைக்கே வந்துவிட்ட பிறகு அவரையடையத் துடிக்கிறாள் சுலைகா.

அன்றிரவு அவர் அயர்ந்து தூங்குகிறார். அவளால் தூங்கவே முடியவில்லை. பின்னிரவு அவள் யூசுபை நெருங்குகிறாள். அவளது அருமைத் தோழியும் அவளறியாமலேயே இருளிலே மறைந்து மறைந்து பின் தொடருகிறாள். இளவரசியின் எண்ணம் அந்தத் தோழிக்குப் புரிந்துவிடுகிறது. பெண்மைக்கே பெருமை தரும் அவளது கற்பைப் பாதுகாக்கவே தோழி தொடர்ந்து கண்காணிக்கிறாள்.

எலிபிடிக்கப் பதுங்குகின்ற பூனை போன்று
இருளிடுக்கில் பதுங்கிநின்ற தோழி நெஞ்சில்
கிலிபிடிக்க இளவரசி கரம் பிடித்துக்
கீர்த்திமிகும் பெண்ணுடைமை யாகும் கற்பைப்
பலிகொடுக்கத் துணிந்த செயல் தடுத்து…”

நிற்கிறாள், ‘அடிமையின் அழகிலே மனமே வைத்து அரசகுலப் பெருமைக்கே அழிவு’ தேடவேண்டாமென்று தோழி எடுத்துக் கூறுகிறாள். ‘அடிமையெனக் கருதினையோ? கனவில் தோன்றி அடிமை கொண்ட என்னரசர் இவரேயாவார்.’ என்பதைத் தோழிக்குத் தெரிவிக்கும் சுலைகா;அவரைத் தன்னிடம் அழைத்து வரும்படியும் பணிக்கிறாள்.இந்த அழகரே இளவரசியின் கனவுக்காதலனென்பதையறிந்து மகிழ்ந்த தோழி,அவளது கற்பைக் காக்கும் கடமையில் தவற மறுக்கிறாள்.

ஒருநாள் யாருமே இல்லாத சமயத்தில் யூசுபைப் பலவந்தமாக அடைய முயற்சி செய்கிறாள் சுலைகா. இச்சமயத்தில் அங்கே அஜீஸ் வந்து விடுகிறார். தன்னை யூசுப் பலவந்தம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறாள். ஆனால் உண்மையை அமைச்சர் அஜீஸ் உணருகிறார் என்றாலும், இதைக் காரணமாக வைத்து சுலைகாவையும் யூசுபையும் பிரித்து வைக்கத் திட்டமிட்டு யூசுபைச் சிறைப்படுத்துகிறார். அங்கேயும் தொடர்ந்து சென்று முயற்சி செய்கிறாள் சுலைகா. ஆனால் யூசுப் அவள் முயற்சிக்கு இணங்கவில்லை. ‘சிறைபட்டு வாழ்ந்தாலும் வாழ்வேன், கறைபட்டோ குறைபட்டோ வாழமாட்டேன்’ என்று சத்தியத்தின் பால் உறுதியாக நின்று தவறிழைக்க மறுக்கிறார் யூசுப்.

மிசுரின் மன்னர் கண்ட ஒரு பயங்கரக் கனவுக்குப் பலன்கூறும் காரணத்தால், சிறையிலிருந்து விடுதலை பெற்ற யூசுப், சிறைப்படுவதற்கான எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது நிரூபணமாகி அந்த நாட்டின் உணவு அமைச்சராகவும் முதலமைச்சர் அஜீஸின் மரணத்திற்குப்பின், முதலமைச்சராயும் ஆகிறார். அஜீஸின் மரணத்தால் விதவையாகிவிட்ட சுலைகாவை யூசுபுக்கே மணமுடித்து வைக்கிறார் மன்னர். இதுதான் யூசுப் – சுலைகாவின் கதையாகும்.

இதனை இனியதொரு தமிழ்க் காப்பியமாக ஆக்கித் தந்திருக்கிறார் கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனார். அவர் நாடறிந்த நல்ல கவிஞராவார். அவரது இந்தக் காப்பியம் முழுவதிலும் அவரது கவித்திறன் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. ஆண்டிருக்கும் சொற்கள் மிக எளியவை. நடைமிகத் தெளிவாக, சரளமாக, ஆற்றொழுக்குப் போல் அமைந்திருக்கிறது. எந்த ஒரு சொல்லின் பொருளையும் தெரிந்து கொள்ள அகராதியைப் புரட்டத் தேவையே இல்லை. அத்தகைய எளிய சொற்களால், மிக ஆழ்ந்த உணர்ச்சிகளையும் மிகத் தெளிவாய்ச் சித்திரித்துக் காட்டிவிடுகிறார் கவிஞர்.

கவிஞர் மேற்கொண்ட இந்தப்பணி, மிகவும் கடினமானது. திருமறை கூறும் இக்கதையின் நிகழ்ச்சிகளுக்குக் காப்பியவடிவம் கொடுத்தாக வேண்டும். இது ஒரு கூரிய கத்தியின் மேல் நடப்பது போன்றது. இந்தச் சாதனையைக் கவிஞர் மிக வெற்றிகரமாய்ச் செய்து முடித்திருக்கிறார். பாத்திரங்களின் பண்புகளையும், அவர்களிடையே நடைபெறும் உரையாடல்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் கவிஞர் தம் திறமை முழுவதையும் காட்டியிருக்கிறார். அதே சமயத்தில் யூசுப் ஒரு நபி என்பதையும், சுலைகா அந்த நபிக்கு மனைவியாகப் போகிறவளென்பதையும் கவிஞர் மறந்து விடவில்லை.

இந்தக் காப்பியத்தினூடே கவிஞர் பல அரும்பெருங் கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்றார். யூசுப் சிறுவனாக இருக்கும் போது இறைவனின் தன்மையை

சூழும் இருளும் விரைந்தோடும்
சூரியன் மீண்டும் ஒளி காட்டும்
வாழும் உயிர்கள் அத்தனையும்
வாய்ப்புக் கேற்ப வாழ்ந்திடவே
தாழ்வும் வாழ்வும் சமமாக்கித்
தந்தான் இறைவன்”

என்று பாடுகிறார் கவிஞர்.

ஒருவர் ஆழ்ந்த துயரத்திலிருக்கும் போது அவருக்குப் பொழுது நீண்டு கொண்டே இருப்பதாகவும், அது மெள்ளமெள்ள நகர்ந்து கொண்டே போவதாயும் தோன்றுவது மனித அனுபவம். இந்த அனுபவத்திற்கு ஒரு உருவகம் கொடுத்து, இரவு முழுவதும் சுலைகா துயரிலே துவண்டு கொண்டிருப்பதைச் சொல்லும் போது –

சோர்ந்து கிடக்கும் சுலைகாவின்
துயரம் காணச் சகியாமல்
ஊர்ந்து சென்றனள் இரவுத்தாய்’

என்று சுட்டிக் காட்டுகிறார் கவிஞர். சுலைகா தன் கனவிலே தோன்றிய ஆணழகருடன் பேசுகின்ற பேச்சையும், தன் உணர்ச்சிகளை அவள் வெளிப்படுத்துவதையும் கவிஞர் பல அருமையான பாடல்களின் மூலம் வடித்துத் தருகிறார். ‘பெண்ணுக்குப் பிழை செய்த பெரும் பாவம்

தனை எண்ணிப் பேச்ச டைத்துக்
கண்ணுக்கு விருந்தாக நிற்கின்ற
தெதற்காக……?’ -என்றும்

என்றைக்கு நின் விழியில் பட்டேனோ
அன்றைக்கே எனையழித்துச்
சென்றிட்ட நீ எதற்கே இன்றைக்கு
என்னில்லம் திரும்ப வேண்டும்?’

என்றும் ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் கேட்கும் சுலைகா, தான் எப்படி இருந்தவள் எப்படியாகி விட்டேன் என்பதை விளக்கிக் கூறுகையில்:

மணங்கவரும் ரோஜாவாய் மணந்த எனை
ஏக்கத்தால் மஞ்சள் பூத்தப்
பிணமாக்கிப் பூவரசம் பூவாக்கும்
ஆசைநோய் பிடிக்கச் செய்து
குணமாக்கும் அருமருந்தும் கொண்டோடி
மறைந்திட்ட கூற்றுவா!…” என்றழைக்கிறார்.
ஒரு பெண் எத்துணை அழகுடையவளாயினும்-என்னதான் அந்தஸ்துடையவளாயினும் ஒரு ஆணின் கைப்பிடிக்கும்போதுதான் அவள் பெருமை சிறக்கும் என்பதை

பிறந்திடும் கொடியி லிருந்திடும் மலர்கள்
பெருமையே பெற்றிடா துதிரும்
பிறந்திடும் மனையி லிருந்திடும் பெண்ணும்
பிறவியின் பெருமையை இழப்பாள்
பிறப்பிட மன்றி புகுமிடம் சிறப்புப்
பெற்றிடும் மலர்களே பெண்கள்!…” –

என்று எவ்வளவு ஆழகாக எடுத்துக் காட்டி விடுகிறார் கவிஞர்.

வாதத் திறமையினால் தம் கட்சியை நிலை நிறுத்த முயலும்தேர்ந்த வழக்கறிஞர்களைப் போல யூசுபும்-சுலைகாவும் வாதிடும் பாடல்களைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டிய அளவிற்குச் சுவையாகவும் சிறப்பாகவும் எழுதி இருக்கிறார் கவிஞர்.

என்னிதயச் சோலையினில் தாம்விதைத்த
காதல்விதைக் கேற்ற வண்ணம்
என்னுணர்வுக் குருதியினைத் தண்ணீராய்ப்
பாய்ச்சிவளர்த் தின்ப முற்றேன்:
உன்னுடைய காதல்விதை உயர்கனிகள்
தருமரமாய் ஓங்கி, என்றன்
மென்னுடலில் நரம்பாக வேரோடி
விட்ட பின்னே வெட்டப் போமா?”

என்று வினவுகிறாள் சுலைகா.

வாய்மையெனும் மாளிகையின் மதிலுடைக்கப்
பெருமரமே வளரக் கண்டால்,
தூய்மையெனும் கோடரியால் பிளந்தெறிவர்
மாளிகையின் சொந்தக் காரர்!
தாய்மையெனும் அரும்பதவி தாங்குகின்ற
பெண்குலமே தவறு மாயின்,
மாய்ந்தொழியும் மனிதநெறி அதற்குதவும்
ஆடவரும் மிருக மாவார்!’

என்று மிக அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும், கம்பீரமாகவும் யூசுப் பதில் கூறுவதாகப் பாடுகிறார் கவிஞர்.

நேர்மை நின்று தவறாத யூசுப், என்ற முறையில் அவர் உருவாக்க நினைத்த சமுதாயம் எத்தகையது என்பதையும் கவிஞர் ஆங்காங்கே சுட்டிக் காட்டுகிறார்.

தனியொருவர் தவறிழைப்பின் அவர்குலத்தை,
சந்ததியைச் சார்ந்தவரைச் சமுதாயத்தின்
தனிப்பெருமை அனைத்தையுமே தகர்ப்பதே போல்…

என்பது எத்தகைய நடைமுறை உண்மை! இத்தகைய கருத்துச் செறிவும், கவிதை நயமும் காப்பியம் முழுவதும் மண்டிக் கிடக்கின்றன. சொல்லின் எளிமையும், நடையின் சரளமும், உணர்ச்சியின் ஆழமும், கதையின் சுவையும் நூலைக் கையில் எடுத்தவரை அதை முடிக்காமல் கீழே வைக்க அனுமதிக்க மாட்டா. இத்தகைய சிறந்த காப்பியம் 1957ஆம் ஆண்டில் முதன்முறையாக வெளிவந்தபிறகு அதன் மூன்றாம் பதிப்பு வெளியாவதற்கு இருபது ஆண்டுகள் செல்ல வேண்டியிருந்தது என்பது ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் கொடுப்பதாகும்.

யூசுப்-சுலைகா என்ற பெயரைப் பார்த்து விட்டு ஏதோ இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என யாரும் எண்ணிவிடக் கூடாது.

இது மொழியால் தமிழ்க் காப்பியம்,
உணர்ச்சியினால் காதற் காப்பியம்,
பண்பினால் மனிதக் காப்பியம்,
போதிக்கும் அறத்தினால் அமர காவியம்.

இத்தகையக் காப்பியத்தை ஆக்கித்தந்த கவிஞர் திலகம்சாரணபாஸ்கரனாருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, சிறப்பு மிகு இத்தகையக் காப்பியங்கள் இன்னும் பல செய்வதற்கான எல்லா நலன்களையும் அவருக்குத் தந்தருளுமாறு இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மு. மு. இஸ்மாயீல் அணிந்துரை
மயிலாப்பூர்
சென்னை
27-3-1976