Archive for the ‘ரயில் பிரயாணத்தின் விளைவு’ Category

ஒரு ரயில் பிரயாணத்தின் விளைவு

sarana

ஒருமுறை கவிஞர் சாரண பாஸ்கரன் (T.M.M. அஹ்மத்) அவர்கள் சென்னை செல்வதற்காக திருச்சி ஜங்ஷனில் காத்திருக்கிறார். முன்பதிவு செய்யப்படாத மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம்   செய்ய வேண்டிய சூழ்நிலை.

இரண்டு இரயில்கள் வருகின்றன.  இரண்டிலும் நல்ல கூட்டம். கால் வைக்கக் கூட இடமில்லை. அந்தளவு கூட்ட நெரிசல். நீண்ட நேரத்திற்குப் பிறகு,  மூன்றாவதாக ஒரு ரயில் வருகிறது. முண்டியடித்துக் கொண்டு கவிஞர் ஏறி விடுகிறார்.  வேறு வழியில்லை

இதிலும் ஏகப்பட்ட நெரிசல். நின்று கொண்டே பயணிக்கிறார்.  குடும்பத்தோடு பிரயாணம் செய்யும் ஒருவர் அவருடைய பரிதாப நிலையைக் கண்டு இரக்கப்பட்டு தன் மடியில் படுத்திருந்த குழந்தையைத் தூக்கி தன் காலடியில் பெஞ்சுக்கு கீழே படுத்த வைத்துவிட்டு அவருக்கு உட்காருவதற்கு இடம் கொடுக்கிறார்.

அவருக்கும் கவிஞருக்கு இடையே உரையாடல் நடைபெறுகிறது. அந்த உரையாடல் அவருக்குள்ளே ஒரு பெரும் மாற்றத்தை உண்டு பண்ணுகிறது.  இதோ அந்த உரையாடல்

பிரயாணி: உங்களின் சொந்த ஊர் எது?

கவிஞர்: தஞ்சை ஜில்லா

பிரயாணி: தஞ்சை ஜில்லாவே உங்களின் ஊரா?

கவிஞர் : அப்படிப் பார்க்கப்போனால், பாரத தேசமே என் ஊர்தான்

பிரயாணி: பாரதம் உங்களுக்கு மட்டுமா, நம் எல்லோருக்குமே சொந்த ஊர்தான் ! நான் கேட்டது நீங்கள் பிறந்த ஊரை- வாழும் ஊரை..?

கவிஞர்: தஞ்சை ஜில்லாவிலே ஒரு சிறு கிராமம்; பெயர் கூத்தாநல்லூர்.

பிரயாணி: மன்னார்குடிக்கும் திருவாரூருக்கு மிடையே உள்ள கூத்தாநல்லூர்தானே?

கவிஞர்: ஆமாம். அதே ஊர்தான்.

பிரயாணி: அந்த ஊரிலே கொஞ்ச காலத்துக்கு முன்னால் சாரணபாஸ்கரன் என்று ஒரு கவிஞர் இருந்தாரே, அவர் இப்போது இருக்கிறாரா, இறந்து விட்டாரா?

கவிஞரைப் பற்றி கவிஞரிடமே வீசப்பட்ட இந்த கேள்வியை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டுப் போகிறார். அந்த பிரயாணி இப்படியொரு கேள்வியைக்  கேட்டதற்கு நியாயமான காரணம் இருக்கத்தான் செய்கின்றது.

1942-ஆம் ஆண்டு தன் எழுத்துலகப் பணியைத் தொடங்கிய கவிஞர், “மணியோசை” (1946),  “சாபம்”, “சங்கநாதம்”, “இதயக்குமுறல்” ((1947-1951),  “யூசுப் ஜுலைகா” (1956), “மணிச்சரம்” (1959), என   பற்பல நூல்களை வெளியிட்டார்.

1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருடைய எந்த நூலும் வெளிவரவில்லை. இந்த ரயில் பிரயாண உரையாடல்  நடைபெற்ற ஆண்டு 1977.   அதாவது, கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் மெளனம்.

அந்த பிரயாணி கவிஞரைப் பார்த்து “கவிஞர் சாரண பாஸ்கரன் இறந்து விட்டாரா?” அன்று அவரிடமே வினவியதில் எந்த ஓர் ஆச்சரியமும் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். ஏனெனில் பிரபலமாக இருக்கும் ஒரு கவிஞன் எப்போதும் மக்கள் தொடர்பிலேயே இருக்க வேண்டும். இல்லையெனில் காலம் அவனை மறந்துவிடும்.

பிரயாணி : (மீண்டும் கேட்கிறார்)  நான் கேட்டதற்கு பதிலில்லையே, அவர் இருக்கிறாரா, இறந்து விட்டாரா?

கவிஞர்: (உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு) அவர் இறக்கவில்லை, இருந்துக்கொண்டுதானிருக்கிறார்.

பிரயாணி : அவர் நம்மோடு வாழ்ந்துக் கொண்டுதானிருக்கிறாரா? அதற்கான அடையாளம் தெரியவில்லையே?

கவிஞர் : ம்…ம்ம்… (சற்று மெளனம்)

பிரயாணி : ஒரு கவிஞர் உயிரோடிருகின்றான் என்றால், அவன் கவிதைகள் உலாவிக் கொண்டிருக்க வேண்டுமே ! அவர் கவிதைகளையே காண முடியவில்லை. அவர் எழுதிய எந்த புத்தகமும் இந்த தலைமுறையினர் வாங்க முடியவில்லை. எப்படி அவர் உயிரோடிருக்கிறார்?

கவிஞர்: காலமும் சூழ்நிலைகளும் அவரை முடக்கிவிட்டன. அதனாலேயே வாய் பொத்தி ஊமையாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

பிரயாணி: கவிஞனாகப் பிறந்தவன் எப்படி ஊமையாக வாழ முடியும்? அவன் இறந்து விட்டால்கூட  நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் உயிர்க் கவிதைகளின் சிருஷ்டி கர்த்தாவாயிற்றே??

கவிஞர்: அவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவரது எந்தெந்த புத்தகங்களை படித்திருக்கிறீர்கள்?

பிரயாணி: அவரது எல்லா புத்தகங்களையும் படித்திருக்கிறேன். அதில் ஏதும் என் சந்ததிகளுக்குத்தான் இப்போது கிடைக்கவில்லை.

ரயில் பயணத்தில் ஏற்பட்ட இச்சந்திப்பின்போது ஏற்பட்ட உரையாடல் கவிஞரின் உள்ளத்தில் ஒரு பெரும் பாதிப்பை உள்ளாக்குகிறது. சிந்திக்கிறார்.  தானெழுதிய பழைய புத்தகங்களை மறுபதிப்பு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்கிறார். இல்லையென்றால் சமுதாயம் அவரை உதறித்தள்ளிவிடும் என்ற உண்மையைப் புரிந்துக் கொள்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் எழுதிய புத்தகங்களின் பிரதி அவரிடம் ஒன்றுகூட இல்லாமல் போனதுதான்.

அதற்குப் பிறகு தானெழுதிய புத்தகங்கள் யார் யாரிடம் இருக்கிறது என்று மும்முரமாக தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் கவிஞர்.

பேராசிரியர் ஜி.சுப்பிரமணியம் பிள்ளை தன்னிடமிருந்த “சாபம்” நூலைத் தருகிறார். பேராசிரியர் கே.எம்.காதர் முஹயிதீன் அவர்கள் தன் திருமணப் பரிசாக பெற்றிருந்த “யூசுப் ஜுலைகா’ நூலைத் தருகிறார். “மணிச்சரம்” நூலை ஆதம் A.நெய்னா முஹம்மதுவிடமிருந்து கிடைக்கிறது, “நாடும் நாமும்” என்ற பெயரில்  அவரெழுதிய நூலை M. செய்யது முஹம்மது (ஹஸன்) தன் மகள் பாத்திமாவிடமிருந்து பெற்றுத் தருகிறார்.

By Abdul Qaiyum

இதோ என் கையில் தவழும் “கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனாரின் கவிதைகள்” (1977) என்ற இந்த நூல் அதன் பிறகு அக்கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து வெளியிடப்பட்டது. (இந்த நூலை நான் பெறுவதற்கு நான் பட்ட பாடு எனக்குத் தெரியும், பூதமங்கலம் தாஜ் அண்ணன் அவர்களுக்கும் அவரது துணைவியார் பஷீரா தாஜ் அவர்களுக்கும்    நான் மிகவும்  கடமைப்பட்டிருக்கிறேன்)

அந்த ரயில் பயணத்தின் சந்திப்பின்போது இந்த உரையாடல் கவிஞருக்கும் அந்த பிரயாணிக்குமிடைய நடைபெற்றிருக்காவிட்டால் இந்த நூல் இந்நேரம் என் கையில் தவழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

அப்துல் கையூம்