Archive for the ‘விதியா? சதியா?’ Category

விதியா? சதியா?

Farmer

உள்ளம் துடிக்குது சோதரர்காள் – என்றன்
   உதிரம் கொதிக்குது சோதரர்காள்
கள்ளமில் லாமலே சொல்லுகின்றேன் – உங்கள்
   கருத்தினைச் சற்றே திருப்பிடுவீர் !

உண்ணும் உணவை யுண்டாக்கிடுவோன் – இந்த
   உலகின் நலனுக் குழைத்திடுவோன்
பண்ணும் தொழிலின் பலன்களெல்லாம் – அவன்
   பஞ்சத்தைப் போக்கிடா விந்தையென்ன ?

முப்போகம் விளையும் நாட்டினிலே – பஞ்சம்
   முற்றுகை இட்டது எப்படியோ ?
எப்போதும் எம்மவர் வீட்டினிலே – பசி
   ஏகா திருப்பதெக் காரணமோ ?

வாழ்வை வளம்பெறச் செய்யுகிறோம் – நாட்டின்
   வறுமை யுடன்சம ராடுகிறோம் !
தாழ்வுற்றே இன்னமும் வாடுகிறோம் – இந்தச்
   சதியினை விதியென நம்புவதா ?

தேடித் திரட்டுவோர் எந்தனினம் – அதைத்
   தேட்டையிடுவோர் உலுத்த ரினம் !
வாடித் துடிப்போர் எழுந்துவிட்டால் – இன்று
   வஞ்சித்து வாழ்பவர் வீழ்ந்திடுவார் !

– கவிஞர் திலகம் சாரணபாஸ்கரன்
1946 (இதயக் குமறல் தொகுப்பிலிருந்து)