தமிழக முஸ்லிம் சமுதாய சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்று நிற்பவர்களில் ஒருவர் கூத்தாநல்லூர் தந்த கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் அவர்கள். அவரின் இயற்பெயர் டி.எம்.எம். அஹமது என்பதாகும். கவிதா மண்டலத்தில் சாரண பாஸ்கரன் என்னும் பெயர் ஒளிசிந்தும் நட்சத்திரம் போல் இன்றைக்கும ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அவர் எழுதிய யூசுப் – ஜுலைகா காவியம் இறவா இலக்கியங்களில் ஏற்றமுள்ளதாக என்றும் இலங்கும் படைப்பாகும்.
டிசம்பர் 11-ல் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டையொட்டி கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் கவிதைகளையும் மற்றுமுள்ள அவரின் சொல்லோவியங் களையும் நாட்டுடைமையாக்கி, அவரின் நலிந்த குடும்பத்துக்கு நன்மை செய்யும்படி தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடத்தில் கோரிக்கை வைத்தோம். மாண்புமிகு துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி, கவிஞரின் நூற்களை நாட்டுடைமை ஆக்குவதற்குரிய ஆயத்தங்கள் செய்யும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என்னும் நற்செய்தி கிடைத்திருக்கிறது.
டிசம்பர் முஸ்லிம் லீக் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு `நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்’விருது வழங்கிச் சிறப்பிக்க உள்ளோம். `கல்லகுடி கொண்ட கருணாநிதி வாழ்கவே – உன் உள்ளம் குடி கொண்ட உண்மை தலைவன் வாழ்கவே! ’’ என்னும் கழகப் பாடலை எழுதியவர் சாரண பாஸ்கரன்தான். இப்பாடலை இசைமுரசு நாடு முழுவதிலும் பாடியுள்ளார்; பல லட்சம் பேர் உள்ளத்தில் இப்பாடலை இடம் பெறச் செய்துள்ளார்.
இதே கவிஞர்தான் இதையும் எழுதினார்:
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
செல்லுங்கள் துணிந்து செல்லுங்கள்
வெல்லுங்கள் பகைமை வெல்லுங்கள்
சொல்லுங்கள் தக்பீர் சொல்லுங்கள்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்
முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்!
– இந்தப் பாடலை நாகூர் ஹனீபா அவர்கள் பாடும்போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள், நாரே தக்பீர் என்றதும் `அல்லாஹு அக்பர்’ என்று முழக்கமிடுவதை மண்ணும் கேட்டிருக்கிறது! விண்ணும் கேட்டிருக்கிறது.
அந்த அற்புதப் பாடலில் வரும் பின்வரும் வரிகளையும் படித்துப் பாருங்கள். மாநாட்டுக்கு வருகை தரத் துடித்து எழுவீர்கள்.
“அல்லாஹ்வைத் தவிர யார்க்கும்
அஞ்சிடாத சிங்கங்காள்
அண்ணல் நபி வழியில்
அணிவகுத்து நில்லுங்கள்
நல்லவர்க்குக் கைகொடுத்து
நன்மைசெய முந்துங்கள்
நடுவில் வந்த தூக்கம் நீக்கி
நெஞ்சுயர்த்தி நில்லுங்கள்!’’
நெஞ்சுயர்த்தி நிற்பதையும் அணிஅணியாய்ச் செல்வதையும் அல்லாஹ் பெரியவன் என்று சொல்வதையும் காணப் போகிறோம்! மாலையில் நடக்கும் பிறைக்கொடி பேரணி மூன்று மணிக்கு வேளச்சேரி நெடுஞ்சாலை காமராசர்புரம் அண்ணா விளையாட்டுத் திடலில் தொடங்கி ஐந்து மணியள வில் தாம்பரம் ரயில்வே மைதானத்தில் லட்சக்கணக்கில் நுழையப் போகிறோம்!
இரவு பகல் பாராது உழைத்து உழைத்தே
இணையற்ற சாதனையில் வெற்றிகண்டே
உறவு முறை பாராது உண்மை பார்க்கும்
ஒப்பரிய காயிதெ மில்லத் வாழ்க
– என்று கவிஞர் திலகம் பாடினார்! அந்தத் தலைவர் பெயரால் – கண்ணியத் தென்றல் காயிதெமில்லத் பெயரால் எழுந்து நிற்கும் நுழைவாயில் வழியே தான் நுழையப் போகிறோம்!
புதிய வரலாற்றில் நுழைவதற்கு புறப்பட்டு வாருங்கள் தக்பீர் முழங்கி வாருங்கள்!
சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்
சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்
-என்று கூறி வாருங்கள்! நாட்டுக்கு
அதைக் கூற வாருங்கள்.
நன்றி : முஸ்லீம் லீக்.காம்