Posts Tagged ‘AVM Jaffardeen’

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

Jaffardeen1 Jaffardeen2

 

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

என்ற கவிஞர் வாலியின் பாடல் என் காதுகளில் ரீங்காரமாய் ஒலித்தபோது எனக்கு ஏ.வி.எம்.ஜாபர்தீனின் நினைவுகள்தான் மனதில் அலைபாய்ந்தன.

ஆங்கிலக் கவிஞன் ஷேக்ஸ்பியர் கூறியதைப் போன்று ‘உலகமெனும் நாடக மேடை’யில் நடிப்பதற்கு எத்தனையோ மனிதர்கள் வருகிறார்கள்; போகிறார்கள். அவர்கள் எல்லோரும் நம் மனதில் நிலைபெற்று நின்று விடுவதில்லை. சிலர் வருவதும் தெரியாது; போவதும் தெரியாது. வெகுசிலரை மாத்திரம் அவர்கள் நம் கண்ணை விட்டு மறைந்த பின்னரும் நினைத்துப் பார்க்கிறோம்; அவர்தம் செயலைப் போற்றுகிறோம்; விழா(த) நாயகர்களுக்கு விழா எடுக்கிறோம்.

கதாநாயகனாக மேடைக்கு வருபவர்களை விட சிற்சமயம் ‘கெளரவ’ நடிகர்களாக அரங்கேறுபவர்கள்தான் நம் மனதை திருடிச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் “சமநிலைச் சமுதாயம்” கெளரவ ஆசிரியர்  ஏ.வி.எம்.மெய்யப்பன்.

தெரிந்தேதான் எழுதுகிறேன். எப்பொழுதும் உண்மையையே பேசும் ஜாபர்தீனை மெய்யப்பன் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கக்கூடும்?

இவர் தாளாளர் மட்டுமல்ல. தாள் + ஆளரும்கூட. பத்திரிக்கைத் தாளை ஆண்டவரை  தாள்ஆளர்  என்று கூறுவது பொருத்தம்தானே?

ஜாபர்தீன், வாழ்க்கை நாடகத்தில் ஏற்று நடித்த பாத்திரங்கள் பலவுண்டு. தொழிலதிபராக, கொடை வள்ளலாக, இலக்கியவாதியாக, சமுதாயக் காவலராக, சிறந்த பண்பாளராக, நல்ல படைப்பாளியாக, முற்போக்கு சிந்தனைவாதியாக, இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொருளாளராக – இப்படியாக பன்முகம் கொண்ட கீர்த்திமிக்க பாத்திரப்படைப்பு அந்த சூத்திரதாரி. அவரை  இமய விளிம்பிற்கு உயர்த்தியது அவரது  கடின உழைப்பு.

 மாபெரும் சபைகளில் நீ நடந்தால்உனக்கு

மாலைகள் விழ வேண்டும்ஒரு

மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று

போற்றிப் புகழ வேண்டும்.”

என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் இவருக்கும் அச்சில் வார்த்ததுபோல் பொருந்துகிறது.

1975-ஆம் ஆண்டு “கூத்தாநல்லூர் பாரதிதாசன்” என்று போற்றப்படும் கவிஞர் சாரணபாஸ்கரனுக்கு பொருளுதவி தேவைப்படுகிறது. யாரிடமும் சென்று ‘வெறுமனே’ கையேந்த அவரது மனம் இடங் கொடுக்கவில்லை. தமிழ்ப் படித்த கர்வம் அவருக்குண்டு.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் தன்னை சீராட்டி பாராட்டி வளர்த்த தமிழன்னையையே துணைக்கு அழைக்கிறார் கவிஞர். தன் குழந்தைக்கு ஒரு சோகமென்றால் தாயானவள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பாளா?

எழுதுகோலை எடுக்கிறார். மளமளவென்று தன் சோகத்தை வேகமாய் ஒரு காகிதத்தில் வடிக்கிறார். தான் படித்த தமிழ் தன் துன்பத்தை போக்கும் என எண்ணுகிறார்.

எழுத முடிவெடுத்தாகி விட்டது. இனி யாருக்கு எழுதுவது? அவன் இன்பத்தமிழையும், இதயத்தையும் ஒருசேர புரிந்துக் கொள்பவனாக இருக்க வேண்டும். ‘அழைத்தவர் குரலுக்கு வருபவனாக இருக்க வேண்டும். பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிபவனாக இருக்க வேண்டும். காற்றடித்தால் வீடாகவும், கடுமழையில் குடையாகவும், ஆற்றாலழுதால் அழுத கண்ணீரை அங்கே துடைக்கும் கையாகவும்’ இருக்க வேண்டும்.

 “அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும் உடையான் சடையன்”

என்ற பெருமைக்குரிய சடையப்ப வள்ளலின் நினைவு கவிகம்பனுக்கு வந்ததைப்போன்று கவிஞர் சாரண பாஸ்கரனுக்கு ஏ.வி.எம்.ஜாபர்தீனின் முகம் கண்ணெதிரே தோன்றி கனிமுகத்தைக் காட்டுகின்றது.

 “சீட்டுக்கவி” ஒன்றை எழுதி அந்த பாட்டுடைத் தலைவனின் பார்வைக்கு  அனுப்பி வைக்கின்றார்.

எங்கள்  நண்பர் குழாமைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் “சீட்டுக்கவி” என்றுதான் அழைப்போம். அவர் யார் யாருக்கெல்லாம் “சீட்டுகவி” எழுதியிருக்கிறார் என்று தயவுசெய்து கேட்க வேண்டாம். சதா “ரம்மி” “மூணுசீட்டு” என்று சீட்டாட்டம் ஆடிப் பொழுதை வீணடித்துக்கொண்டிருந்த  ‘டம்மி’ கவிஞரை வேறெந்த பெயர்கொண்டு அழைப்பதாம்?

“சீட்டுக்கவி” என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். முடியரசர் அல்லது வள்ளல் ஒருவருக்கு புலவர் பொருளதவி கேட்டெழுதும் விண்ணப்பத்திற்கு “சீட்டுக்கவி” என்று பெயர். இதில் கவிஞரின் சாதனையும் வள்ளலின் புகழும் பாடப்படும்.

மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் என்பவருக்கு அருணாசல கவிராயரும், எட்டயபுரம் ஜமீனுக்கு பாரதியாரும்  சீட்டுக்கவிகள் எழுதி அனுப்பிய நிகழ்வுகளை நான் படித்ததுண்டு.

கவிஞர் சாரண பாஸ்கர் எழுதி அனுப்பிய “சீட்டுக்கவி” ஜாபர்தீனின் கைகளில் கிடைக்கிறது.

 

இல்லத் துணையாளை எனக்களித்துத் துணையளித்த

செல்வத் திருக்குலமாம் அவராத்தர் செழுங்குலத்தில்

வந்துதித்த மைந்தரெல்லாம் வாழ்வுத் துணையாகத்

தந்துவிட்ட நாயனுக்கே தலைசாய்த்து, இந்நாளில்

 

பாட்டுத் திறனறியும் பண்பாட்டுப் புகழ்க் கொடியை

நாட்டும் ஜாபருத்தீன் நல்லன்புத் திருச்சமூகம்

சீட்டுக் கவியெழுதித் தீராத என்துயரை

ஓட்டத் துணிந்திட்டேன் இறையவனே உன் துணையால்!

சீட்டெழுதிப் பட்டகடன் தீராத காரணத்தால்

பாட்டெழுதிக் கடன் தீர்க்கப் பாடாய்ப் படுகின்றேன்

 

கண்ணூறும் நீரில் கவியூற மாட்டாமல்

என் ஊறு வாட்டுவதை எவ்வா றியம்பிடுவேன்?

என்னூறு தீரப்பல எண்ணூறு தேவையதில்

இந்நாளில் ஐநூறு எனக்களித்துக் கடன் தீர்க்கப்

பொன்னூறும் உன்னில்லம் புகுந்திட்டேன், எனதுஇரு

கண்ணூறும் நீர்துடைக்கக் கருணைசெய்ய வேண்டுகிறேன்!

 

இந்த சீட்டுக்கவியை கவிஞர் குறிப்பாக ஏ.வி.எம்.ஜாபர்தீனுக்கு எழுதியனுப்பிய காரணம், அவர் பாட்டுத் திறனறிபவர்;  பண்பாட்டுப் புகழ்க்கொடியை நாட்டுபவர் என்ற காரணத்தினால் என்று நாம் இப்பாடலின் வாயிலாக அறிய முடிகின்றது.

இந்த சீட்டுக்கவியை கவிஞர் குறிப்பாக ஏ.வி.எம்.ஜாபர்தீனுக்கு எழுதியனுப்பிய காரணம், அவர் பாட்டுத் திறனறிபவர்;  பண்பாட்டுப் புகழ்க்கொடியை நாட்டுபவர் என்ற காரணத்தினால் என்று நாம் இப்பாடலின் வாயிலாக அறிய முடிகின்றது.

இவர் தமிழகத்தில் மட்டுமல்லாது கீழை நாடுகளிலும் தன் புகழ்கொடியை நாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்’ பெற்றதைப்போன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் “தமிழோடு நிலைக்கப் பிறந்தவன்” என பாராட்டுப் பெற்ற ஒரு தமிழ்ப்புலவனுக்கு இப்படியொரு அவல நிலையா என்று ஜாபர்தீன் துடிதுடித்துப் போகிறார். ஈந்து சிவந்த கைகளைக் கொண்ட ஜாபர்தீனின் முகமும் வேதனையால் ‘சிவ்வென்று’ சிவந்து போகிறது.

கவிஞரின் ஊறு தீர்வதற்கு உண்மையிலேயே பலநூறு தேவைப்படுகிறது. அதில் ஐநூறு மாத்திரம் தந்தால் போதுமானது என்ற கவிஞரின் ‘போதுமென்ற மனம்’ ஜாபர்தீனின்  இதயத்தைத் தொடுகிறது. அவர் கேட்டதைவிட அதிகமான தொகையினையே ஈந்து ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைந்து’ இன்புறுகிறார்.

 “காயாத புல்லர் இருந்தென்ன போயென்ன? எட்டிமரம் காயாதிருந்தென்ன? காய்த்துப் பலனென்ன?” என்ற பாடல் நமக்குத் தெரியும். கைவிரித்துப் போய் உதவி என்று கேட்பவருக்கு கை விரிப்பவரா இந்த உத்தமர்?

 “வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து” என்ற உட்பொருளை அறிந்தவர் ஜாபர்தீன்.

கவிஞர் சாரணபாஸ்கரனும் ஏ.வி.எம்.ஜாபர்தீனும் ஒரே ஊர்க்காரர்கள் என்பது மட்டுமல்ல. கவிஞருக்கு தமிழ்ப் பயிற்றுவித்து ஆளாக்கிய ஆசிரியர் வரகவி ஸாது ஆத்தனார் என்பவர் ஏ.வி.எம்.ஜாபர்தீனின் குடும்பத்தை சேர்ந்தவர்.

ஜாபர்தீனுக்கு இயற்கையிலேயே தமிழார்வம் மற்றும் இலக்கியத் தாக்கம் சற்று மிகையாகவே இருந்தது. ஏ.வி.எம். ஜாபர்தீனின் இளவல் முனைவர் ஏ.வி.எம்.நஸீமுத்தீனும் ஒரு கவிஞர்தான். கவிஞர் சாரணபாஸ்கரன் வாயாலேயே  “கணிதப்புலவர்” என புகழப்பட்டவர் இவர். கிரேக்க இதிகாசக் கதைகளை தமிழுக்கு கொண்டு வந்தவர்.

“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றும் “வெரை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா காய்க்கும்?” என்றும் முதுமொழிகள் சொல்கிறார்களே,  அது பொய்யல்ல என்பதை நான் உணர்ந்தேன்.

அண்ணனுக்கு தம்பி சளைத்தவரல்ல. என் சொந்த ஊர் நாகூரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் இருவருமே மறைமுகமாக செய்த உபகாரம் இஸ்லாமிய இலக்கியத்திற்கு ஓர் ஆவணம்.

“ஏ.வி.எம் ஜாபர்தீன்- நூர்ஜஹான்” அறக்கட்டளையின் சார்பாக  நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் எழுதிய “இனிக்கும் இராஜநாயகம்” நூலைப் பதிப்பித்தது ஜாபர்தீன் என்றால்,  அண்மையில் நாகூர் குலாம் காதிறு நாவலரைப்பற்றிய விரிவான நூலெழுதி ‘சாகித்திய அகாதெமி’ வாயிலாக வெளியிட்டு நாகூர் படைப்பாளிகளை பெருமை படுத்திய சாதனை ஏ.வி.எம்.நசீமுத்தீனைச் சாரும்.

அறிஞர் எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் முதற்கொண்டு எழுத்தாளர் சுஜாதாவரை இலக்கியவாதிகள் அத்தனை பேருடனும் சுமூகமான உறவு கொண்டிருந்தவர்.ஜாபர்தீன்.

1993-ஆம் ஆண்டு, ஏ.வி.எம்.ஜாபர்தீன் கோலாலம்பூரில் இருந்த சமயம், ஒரு மாலை வேளையில் அவரது தொலைபேசி  மணி ஒலிக்கிறது.

“ஜாபர்தீன்! நான் உங்க ஊருக்கு வந்திருக்கிறேன்”

என்ற பழக்கப்பட்ட குரலைக் கேட்டதும் அழைத்தவர் தன் நெடுங்கால நண்பர் எழுத்தாளர் சுஜாதா என்பதை புரிந்துக் கொள்கிறார் அவர்.

உடனே அவர்களின் இருப்பிடத்திற்குச் சென்று வரவேற்று சுஜாதா, அவரது துணைவி சுஜாதா  ரங்கராஜன், அவருடைய மாமனார், மாமியார் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒரு சைவ உணவு விடுதிக்குச் செல்லத் தயாராகிறார்.

“எங்கள் வீட்டிற்கு அழைக்கலாம் என்றிருந்தேன். ஆனால் அங்கு நீங்கள் உணவருந்த மாட்டீர்களே?” என்கிறார்.. “யார் சொன்னது? நீங்கள் கூப்பிடவில்லை என்ற குறைதான். எங்களுக்கு. சைவ சாப்பாடு தாருங்கள். நாங்கள் வரத்தயார்” என்று எல்லோரும் ஒருமித்த தொனியில் கூறுகிறார்கள்.

அவசர அவசரமாக ஜாபர்தீன் தன் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அத்தனை பேருக்கும் உடனடியாக சைவ உணவு தயார் செய்ய உத்தரவிடுகிறார்.

சுஜாதா குடும்பத்தினர் அவர் விட்டுக்குச் சென்றபோது விதவிதமான சைவ உணவுகள் தயார் செய்து சாப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டுள்லது.  அனைவரும் வயிறார விருந்துண்டபின்,  அவரது காரையும் ஓட்டுனரையும் தந்து அவர்கள் கோலாலம்பூரில் தங்கியிருக்கும் வரை ஊரைச் சுற்றிப்பார்க்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்கிறார். ஆச்சாரமான அய்யங்கார் குடும்பம் பாகுபாடின்றி தன் வீட்டில் உணவருந்தி மகிழ்ந்தது அவருக்கு மனநிறைவைத் தருகிறது.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

 நல்விருந்து ஓம்புவான் இல்

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப விட்டுக்கு வரும் விருந்தினர்களை

முகமலர்ச்சியுடன் தலைவன் வரவேற்க, அவனது இல்லத்தரசியோ வீட்டுக்குள் இருந்தவாறு உள்ளக் களிப்புடன்  உணவு பரிமாற, அந்த விருந்தோம்பலினால் கிடைக்கும் மட்டற்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது?

2003-ஆம் ஆண்டு தினமணி ரம்ஜான் மலரில் சுஜாதா இதுபோன்று எழுதுகிறார் :

திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்றுகுர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டாஎன்றார்நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘The Meaning of the Glorious Quran” என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன்.

 சில நாட்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.

 வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக் கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!’ என்று வியந்தோம். அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற  நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன்.”

என்று இஸ்லாத்தின் புரிதலுக்கு தன் நண்பர் ஜாபர்தீனின் தூண்டுதலை கோடிட்டுக் காட்டுகிறார் சுஜாதா.

ஜாபர்தீன் அமைதியின்றி ஆர்ப்பாட்டமின்றி புரிந்துவந்த இஸ்லாமிய தஃவா பணி நம் மனதைக் குளிர வைக்கிறது.

என் தாய்வழி பாட்டனார் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி வணிகத் துறைக்கு “ஹாட்டின் ப்ளாக்” என்ர கட்டிடத்தை கட்டிக்கொடுத்ததைப் போன்று ஏ.வி.எம்.ஜாபர்தீனும் அந்த பெருமைமிகு கல்வி நிறுவனத்திற்கு கட்டிடம் ஒன்றை கட்டித் தந்துள்ளார்.

 “செத்தும் கொடை கொடுத்தான் சீதக்காதி” என்பார்கள். ஆம்.இவரும் செத்தும் கொடை கொடுத்த செம்மல்தான். “சீனம் சென்றேனும் ஞானம் தேடுக” என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனிதவாக்கு.

ஈகையிலேயே சிறந்த ஈகை கல்விக்கண்களைத் திறந்து வைப்பதுதான். ஒரு சமுதாயமே வாழையடி வாழையாக பயன்பெறும் நோக்கில் புரிகின்ற இவ்வித ஈகையானது “சதக்கத்துல் ஜாரியா” என்ற வகையைச் சார்ந்தது. அந்த கல்வியானால் பயன்பெறும் தலைமுறைகள் தழைக்கும் காலம்வரை அதன் பயனும் நன்மையும் அந்த கொடையாளியின் நன்மை பக்கங்களில் வரவாகிக் கொண்டே இருக்கும்.

வள்ளுவன் சொன்ன”வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்” பட்டியலில் ஏ.வி.எம்.ஜாபர்தீனின்  பெயரும் காலத்தால் அழியாத காவியமாய் இடம் பெற்றுள்ளது என்பதில் சற்றும் ஐயமில்லை.

– நாகூர் அப்துல் கையூம்